Thursday, May 26, 2011


கண்ணதாசன் கவிதை


பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!





என் கருத்து:


கண்ணதாசன் கடவுளை நம்புபவர். அவரே கூட, ஒவ்வொன்றையும் அனுபவித்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.  கண்ணதாசன் இந்தக் கவிதையை எந்த நோக்கத்தில் எழுதினார் என்று எனக்கு தெரியாது.  மனிதர்கள் அனைவரும் வாழ்வை பல்வேறு எதிர்பார்ப்புகளோடு அணுகுவார்கள். பெரும்பான்மை மனிதர்கள் பின்னால் என்ன நடக்க இருக்கிறது எனபதை முன்பே தெரிந்து கொள்ள விரும்பி ஜோசியம் பார்ப்பது, குறி பார்ப்பது போன்ற மூட நம்பிக்கைகளில் ஈடுபடுவதைப் பார்க்கிறோம். ஒரு செயல் நடைபெறும் முன் அதைப் பற்றிய எதிர்பார்ப்புகள் இருப்பது தவறில்லை. ஆனால் என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்தால்தான் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வேன் என்று அடம்பிடிப்பது தவறு. அப்படி எல்லாம் முன்பே நமக்குத் தெரிந்து விட்டால் வாழ்வின் சுவாரஸ்யம் போய்விடும். ஒரு படைப்பு பல கருத்துக்களை வலியுறுத்தும் தன்மை வாய்ந்தது. அதுவும் கண்ணதாசன் அவர்களின் படைப்பு சற்று உயர்ந்தவை. எனவே, வாழ்வில் அடுத்த அடி எடுத்து வைக்கும் வரை அது ரகசியமாக இருப்பதே நல்லது. எது நடந்தாலும், அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள நிச்சயமாக ஏதாவது இருக்கும். எனவே சோதனைகள் என்று நாம் கருதும் அனைத்தும் நாம் புரியவிருக்கும் சாதனைகளுக்கான வழிகளாக அமையும். கடவுள் என்ற ஒன்றை நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி. எல்லாவற்றிற்கும் அவர் துணை புரிவார் என்று எத்தகைய உழைப்பும் இல்லாமல் இருப்பது நம்மை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லாது.


நண்பர்களே, உங்களை நம்பி வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியையும் அனுபவித்து வாழ முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்


- புஷ்பராஜ்

No comments:

Post a Comment