Friday, September 23, 2011

கவிஞர் தாமரையின் கண்ணீர்க் கவிதை


கண்ணகி மண்ணில் இருந்து 
ஒரு கருஞ்சாபம்!

ஏ இந்தியாவே...!எத்தனை கொடுமைகள்  செய்துவிட்டாய்  எங்கள் தமிழினத்திற்கு...

எத்தனை  வழிகளில் 
கெஞ்சியும் கூத்தாடியும்   
காலில் விழுந்தும் கதறியும்  கொளுத்திக் கொண்டு செத்தும்   
தீர்ந்தாயிற்று...

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்...
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..
கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!
குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!
தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!
ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!
ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!
மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!
ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!
தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!
மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!
இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே...
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!
தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!
போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!
வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே...
உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே...
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!
எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!
எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!
நரமாமிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!
இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்...
ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!
நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!..........

பின்குறிப்பு:
உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும் குழந்தைகளே...
அவர்கள் நீடுழி வாழட்டும்!

எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்! உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!


அடியவன் என் கருத்து:
கவிஞர் தாமரை அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் பாடல் வரிகளால் ஈர்க்கப்பட்டேன் முதலில். ஆனால் தன் தமிழுணர்வின் வாயிலாக, தமிழ் மக்களின் மீது தான் வைத்திருக்கும் அன்பின் வாயிலாக என் இதயத்தில் நீங்காத இடம் பிடித்து விட்டார். ஒரு பெண்ணுக்குள் இவ்வளவு உணர்வா என்று செங்கொடி இறந்த போது அறிந்து கொண்டேன். கவிஞர் தாமரை அவர்கள் ஈழத்தமிழர்கள் மீது கொண்டுள்ள மிகுந்த அன்பின் வெளிப்பாடாக இத்தகைய கண்ணீர் கலந்த சாபமிடும் கவிதை எழுதியுள்ளார். நம் அன்றாட பணிகளை செய்வதில் மிகுந்த அக்கறையோடு இருக்கிறோமே தவிர, இன உணர்வுகளை தொலைத்து விட்டு அதைப்பற்றி கவலையின்றி இருக்கிறோம். ஈழத்தில் செத்து மடிந்தவர்கள் யாரோ என்ற உணர்வுதான் நம்மில் பலருக்கு இருக்கிறது. அதனால்தான் எந்தவித உறுத்தலும் இல்லாமல், இனவெறியன் ராஜபக்‌ஷே நம் தொப்புள்கொடி உறவுகளை கொன்று குவித்த போது பார்த்துக்கொண்டிருந்தோம்.
சகோதர, சகோதரிகளே...
இங்கு கவிஞர் தாமரை அவர்கள் இந்தியாவை சாபமிடுவது விரக்தியினால்தான். இந்த தேசம் நம் உறவுகளை காப்பாற்றாமல் போய் விட்டதே என்ற விரக்திதான் அது. 
உணர்வோடு வாழ்வோம்...
உரிமைகளை மீட்டெடுப்போம்..

-புஷ்பராஜ்

பிரபஞ்சன் சிறுகதை

மரி என்கிற ஆட்டுக்குட்டி

"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம்.
"எந்த அற்புத மரி?" என்றேன் நான்.
"இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்."
prabanjan22 தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான்.
"என்னத்துக்கு சார் டி.சி?"
"என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?"
"ஆமாம். அப்பப்போ இஷ்டப்பட்டால், ஏதோ எனக்கு தயவு பண்ணுகிற மாதிரி கிளாசுக்கு வரும். போகும்."
"உம். நீரே சொல்கிறீர் பாரும்." என்று சொல்லிவிட்டு இரண்டாள் சேர்ந்து தூக்க வேண்டிய வருகைப் பதிவு ரிஜிஸ்டரையும், இன்னும் இரண்டு மூன்று ஃபைலையும் தூக்கி என் முன் போட்டார்.
"பாரும். நீரே பாரும். போன ஆறு மாச காலத்திலே எண்ணிப் பன்னிரண்டே நாள் தான் ஸ்கூலுக்கு வந்திருக்கிறாள். வீட்டுக்கும் மாசம் ஒரு கடிதம் எழுதிப் போட்டுக் கொண்டுதான் இருக்கேன். ஒரு பூச்சி, புழு இப்படி எட்டிப் பார்த்து, அந்த கடுதாசிபோட்ட கம்மனாட்டி யாருன்னு கேட்டுச்சா? ஊகூம். சர்தான் போடா நீயுமாச்சு உன் கடுதாசியுமாச்சுன்னு இருக்கா அவள். சரி ஏதாச்சும் மெடிக்கல் சர்டிபிகேட் கேட்டு வாங்கிச்சேர்த்துக்கலாம்னா, வந்தால்ல தேவலாம். நம்ம டி.இ.ஓ மாதிரியில்ல ஸ்கூலுக்கு இஷ்டப்பட்டால் வருகிறாள். வந்தாலும் ஸ்டூடண்ட் மாதிரியா வர்றாள்? சே…சே…சே… என் வாயாலே அத எப்படிச் சொல்றது? ஒரு பிரஞ்சு சைக்கிள்ளே, கன்னுக்குட்டி மேலே உட்கார்ந்து வர்ற மாதிரி பாண்ட் போட்டுக் கொண்டு வர்றாள். பாண்டுங்காணும்… பாண்ட்! என்ன மாதிரி பாண்ட்டுங்கறீர்? அப்படியே 'சிக்'குன்னு பிடிச்சிக்கிட்டு, போட்டோவுக்கு சட்டம் போட்ட மாதிரி, அதது பட்பட்டுன்னு தெறிச்சுடுமோன்னு நமக்கெல்லாம் பீதியை ஏற்படுத்தற மாதிரி டிரஸ் பண்ணிட்டு வர்றாள். சட்டை போடறாளே, மேலே என்னத்துகுங்காணும் இரண்டு பட்டனை அவுத்துவிட்டுட்டு வர்றது? அது மேலே சீயான்பாம்பு மாதிரி ஒரு செயின். காத்தாடி வால் மாதிரி அது அங்கிட்டும் இங்கிட்டும் வளைஞ்சு வளைஞ்சு ஆடறது. கூட இத்தினி பசங்க படிக்கறாங்களேன்னு கொஞ்சமாச்சும் உடம்பிலே வெக்கம் வேணாம்? இந்த இழவெடுத்த ஸ்கூல்லே ஒரு யூனிபார்ம், ஒரு ஒழுங்கு, ஒரு மண்ணாங்கட்டி, ஒரு தெருப்புழுதி ஒன்றும் கிடையாது. எனக்கு தெரியுங்காணும்… நீர் அதையெல்லாம் ரசிச்சிருப்பீர்!"
"சார்…"
"ஓய் சும்மா இருங்காணும். நாப்பது வருஷம் இதுல குப்பை கொட்டியாச்சு. ஐ நோ ஹ்யூமன் சைக்காலஜி மிஸ்டல் டமிள்! தமிழ்சார், எனக்கு மனத்தத்துவம் தெரியும்பா. உமக்கு என்ன வயசு?"
"இருபத்தொன்பது சார்!"
"என் சர்வீஸே நாற்பது வருஷம்."
"பாண்ட் , சண்டை போடக்கூடாதுன்னு விதி ஒன்னும் நம்ம ஸ்கூல்ல இல்லையே சார்."
"அதுக்காக, அவுத்துப் போட்டுட்டும் போகலாம்னு விதி இருக்கா என்ன? வயசு பதினெட்டு ஆகுதுங்காணும் அவளிக்கு! கோட்டடிச்சு கோட்டடிச்சு இப்பத்தான் டெந்த்துக்கு வந்திருக்கிறாள். எங்க காலத்துல பதினெட்டு வயசுல இடுப்பிலே ஒண்ணு, தோள்லே ஒண்ணு இருக்கும். போதாக்குறைக்கு மாங்காயைக் கடிச்சிட்டு இருப்பாளுக. போனவாட்டி, அதான் போன மாசத்திலே ஒரு நாள் போனாப் போவுதுன்னு நம்ம மேலே இரக்கப்பட்டு ஸ்கூலுக்கு வந்தாளே அப்போ, அவள் ஒரு நாள்லே, ஆறு மணி நேரத்துக்குள்ளாறே-ஹார்ட்லி ஸிக்ஸ் அவர்ஸ் சார்- என்ன என்ன பண்ணி இருக்காள் தெரியுமா? யாரோ நாலு தடிக்கழுதைகளோட - நீங்கள்ளாம் ரொம்ப கௌரவமா சொல்லிப்பேளே பிரண்ட்ஸ் அப்படீன்னு - நாலு தடிக்கழுதைங்களோட ஸ்கூல் வாசல்லே சிரிச்சு பேசிட்டு இருந்திருக்காள். நம்ம ஹிஸ்டரி மகாதேவன் இருக்கே… அது ஒரு அசடு. நம்ம ஸ்கூல் வாசல்லே, நம்ம ஸ்டூடண்ட் இப்படி மிஸ்பிஹேவ் பண்ணறாளேன்னு அவ கிட்ட போய் "இப்படி எல்லாம் பண்ணக்கூடாது அற்புத மரி, உள்ள வான்னு கூப்பிட்டு இருக்கான். அவள் என்ன சொன்னாள் தெரியுமா?
"சொல்லுங்க சார்"
"உங்களுக்கு பொறாமையா இருக்கா சார்ன்னு கேட்டுட்டாள். அந்தப்பசங்க முன்னால வெச்சு மனுஷன் கண்ணாலே ஜலம் விட்டுட்டு என்கிட்டே சொல்லி அழுதார். இந்த ஸ்கூல் காம்பசுக்குள்ளே நடக்கிறதுக்குதான் நீங்க பொறுப்பு. வெளியிலே நடக்கிற விவகாரத்துக்கெல்லாம் நீங்க என்னைக் கட்டுப்படுத்த முடியாது சார்னு மூஞ்சியிலே அடிச்ச மாதிரி சொல்றாள். யாருகிட்டே? இந்த நரசிம்மன்கிட்டே.”
எச்.எம்.முக்கு முகம் சிவந்து மூக்கு விடைத்தது.
“இந்த அநியாயம் இத்தோடு போகலே. சாயங்காலம், பி.டி. மாஸ்டர்கிட்டே சண்டை போட்டுக்கொண்டாள். அவன் இப்படிப் பண்ணப்படாது, இப்படி வளையணும், இந்த மாதிரி கையை வச்சுக்கணும்னு அவளைத் தொட்டுச் சொல்லிக்கொடுத்திருக்கான். தொட்டவன், எசகுபிசகா எங்கேயோ தொட்டுட்டான் போலிருக்கு. இவ என்ன கேட்டிருக்கா தெரியுமா?”
“என்னைத் தொட்டுப் பேசாதீங்கன்னு சொல்லியிருப்பாள்.”
“மனுஷ ஜாதின்னா அப்படித்தானே சொல்லியிருக்கணும்? இவள் என்ன சொன்னாள் தெரியுமா?”
எச்.எம். தலையைக் கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டார். அவர் முகம் வேர்த்து விட்டிருந்தது.
”சார்... உங்க பொண்டாட்டியோட நீங்க படுக்கறது இல்லையான்னு கேட்டுவிட்டாள். பாவம்! நம்ம பி.டி. பத்மநாபன் லீவு போட்டு விட்டு போய்விட்டான். முடியாதுப்பா முடியாது. நானும் நாலு பெத்தவன். இந்த ராட்சஸ ஜென்மங்களையெல்லாம் வச்சிக்கிட்டு, இரத்தக் கொதிப்பை வாங்கிக்கிட்டு அல்லாட முடியாதுப்பா. அந்தக் கழுதையைத் தொலைச்சுத் தலைமுழுகிட வேண்டியதுதான்.”
“இப்போ போய் டி.சி. கொடுத்துட்டால், அவள் எஸ்.எஸ்.எல்.சி. எழுத முடியாமல் போயிடும் சார். அவள் வாழ்க்கை வீணாகப் போய்விடும்.”
”அந்தக் கழுதைக்கே அதைப் பத்திக் கவலை இல்லை. உமக்கெதுக்கு?”
***
நமக்கெதுக்கு என்று என்னால் இருந்து விட முடியாது. அது என் சுபாவமும் இல்லை. அத்தோடு, அந்த மரி என்ற ஆட்டுக்குட்டி, ஒரு சின்னப்பெண். அப்படி என்ன பெரும் பாவங்களைப் பண்ணிவிட்டாள்? அப்படியேதான் இருக்கட்டுமே. அதற்காக அவளைக் கல்லெறிந்து கொல்ல நான் என்ன அப்பழுக்கற்ற யோக்கியன்?
நான் சுமதியிடம் சொன்னேன். எச்.எம். மாதிரிதான் அவளும் சொன்னாள்.
”உங்களுக்கெதுக்கு இந்த வம்பெல்லாம்? நீங்க சொல்றதைப் பார்த்தால், அது ரொம்ப ராங்கி டைப் மாதிரி தெரியுது. உங்களையும் தூக்கி எறிஞ்சு ஏதாச்சும் பேசிட்டால்??” என்றாள்.
அவளை சம்மதிக்க வைத்து, அவளையும் அழைத்துக்கொண்டு மரி வீட்டுக்கு ஒரு நாள் சாயங்காலம் போனேன்.
என் வீட்டுக்கு ரொம்ப தூரத்தில் இல்லை அவள் வீடு. ரயில் நிலையத்துக்கு எதிரே இருந்த வரிசை வீடுகளில், திண்ணை வைத்த, முன்பகுதி ஓடு போட்டு, பின் பகுதி ஒட்டிய பழங்காலத்து வீடு அவளுடையது. விளக்கு வைத்த நேரம். திண்ணை புழுதி படிந்து, பெருக்கி வாரப்படாமல் கிடந்தது. உள்ளே விலை மதிப்புள்ள நாற்காலிகள் சோபாக்கள் இருந்தன. ஆனாலும் எந்த ஒழுங்கும் இன்றிக் கல்யாண வீடு மாதிரி இரைந்து கிடந்தன.
“மரி,” என்று நான் குரல் கொடுத்தேன். மூன்று முறை அழைத்தபிறகுதான், “யாரு?” என்று ஒரு குரல் உள்ளிருந்து வந்தது. கலைந்த தலையும், தூங்கி எழுந்த உடைச் சுருக்கங்களோடும், சட்டையும் கைலியுமாக வெளிப்பட்டாள் மரி.
என்னைப் பார்த்ததில் ஒரு ஆச்சரியம், வெளிப்படையாக அவள் முகத்தில் தோன்றியது. என் மனைவியைப் பார்த்ததில் அவளுக்கு இரட்டை ஆச்சரியம் இருக்க வேண்டும்.
“வாங்க சார்.. வாங்க, உட்காருங்க.” என்று எங்கள் இருவரையும் பொதுவாக வரவேற்றுவிட்டு நாற்காலிகளை ஒழுங்குபடுத்தினாள். சோபாவில் நானும் சுமதியும் அமர்ந்தோம். எதிரே இருந்த ஒரு நாற்காலியில் அவள் அமரச் சொன்னதும் அமர்ந்தாள்.
“தூக்கத்தைக் கலைச்சுட்டேனாம்மா?” என்றேன்.
”பரவாயில்லே சார்,” என்று வெட்கத்தோடு தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். முகத்தில் விழுந்த முடியை மேலே தள்ளிவிட்டுக் கொண்டாள்.
”நீங்க எப்படி இங்கே..?”
“சும்மாத்தான்.  பீச்சுக்குப் போய்க்கிட்டு இருந்தோம். வழியிலே தானே உங்க வீடு. பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு நுழைஞ்சிட்டோம். அழையாத விருந்தாளி. உடம்பு சரியில்லையா?”
”தைலம் வாசனை வருதா சார்? லேசாத் தலைவலி. ஏதாச்சும் சாப்பிடறீங்களா சார்?”
“எல்லாம் ஆச்சு. வீட்டிலே யாரும் இல்லையா?”
“வீடா சார் இது....? வீடுன்னா அப்பா, அம்மா இருக்கணும். அப்பா எப்பவோ போயிட்டார். போயிட்டாருன்னா செத்துப் போயிடலே. எங்களை விட்டு விட்டு போயிட்டார். அம்மா என்னைச் சுத்தமாக விட்டுடலை. அப்பப்போ நாங்க சந்திக்கிறோம். சமயத்திலே இரண்டு நாளுக்கு ஒரு முறை நாங்க பார்த்துக்கொண்டால் அது அதிகம். அதனால்தான் இது வீடான்னேன். எனக்கு ஏதோ லாட்ஜிலே தங்கற மாதிரி தோணுது.”
எனக்குச் சங்கடமாய் இருந்தது. இரவுகளில், நசுங்கிய அலுமினியப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பிச்சைக்கு வருகிற குழந்தையைப் பார்ப்பது போல இருந்தது.
”சாப்பாடெல்லாம் எப்படியம்மா?”
“பெரும்பாலும் பசி எடுக்கறப்போ, எங்க தோணுதோ அங்கே சாப்பிடுவேன். ஓட்டல்லேதான். அம்மா வீட்டிலே தங்கியிருந்தா ஏதாவது செய்வாங்க. அம்மா சமையலைக் காட்டிலும் ஓட்டலே தேவலை. நல்லாயிருக்காதுன்னு சொல்லலை. அம்மான்னு நினைச்சு சாப்பிட முடியலே. பொண்ணுன்னு நினைச்சு அவங்களும் பண்ணலை.”
சுமதி என்னை முந்திக்கொண்டு கேட்டாள்.
”உன் அம்மாதானே அவங்க?”
“ஆமாங்க. இப்போ வேறு ஒருத்தரோட அவங்க இருக்காங்க. அவரை எனக்குப் பிடிக்கலை. என்னையும் அவருக்குப் பிடிக்கலை. சரி அவங்க வாழ்க்கையை அவங்க வாழறாங்க. என் வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டு தீர்க்கிறேன்.”
ஓர் இறுக்கமான மௌனம் எங்கள் மேல் கவிந்தது. நான், சாவி கொடுக்காமல் எப்போதோ நின்று போயிருந்த கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
“மரி... ஸ்கூலுக்கு வந்தால், ஒரு மாறுதலாக இருக்குமில்லே?”
“நான் யாருக்காக சார் படிக்கணும்?”
“உனக்காக,”
“ப்ச்!” என்றாள் அவள். இதற்கு மேல் எதுவும் பேசக்கூடாது என்று எனக்குத் தோன்றியது.
”பீச்சுக்குப் போகலாம். வாயேன்.”
”வரட்டுமா சார்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“வா.”
“இதோ வந்துவிட்டேன் சார்,” என்று துள்ளிக் கொண்டு எழுந்தாள். உள்ளே ஓடினாள்.
நான் சுமதியைப் பார்த்தேன்.
“பாவங்க,” என்றாள் சுமதி.
“யாருதான் பாவம் இல்லே? இந்தப் பெண்ணை விட்டுவிட்டு எங்கேயோ இருக்கிற அந்த அம்மா பாவம் இல்லையா? இத்தோட அப்பா பாவம் இல்லையா. எல்லோருமே ஒருவிதத்திலே பாவம்தான்.” என்றேன் நான்.
அப்போதுதான் பூத்த ஒரு பூ மாதிரி, மழையில் நனைந்த சாலை ஓரத்து மரம் மாதிரி, ஓடைக் கூழாங்கல் மாதிரி, வெளிப்பட்டாள் மரி. பேண்ட்தான் போட்டிருந்தாள். சட்டையை டக் பண்ணியிருந்தாள். அழகாகவே இருந்தது அந்த உடை. உடம்புக்குச் சௌகரியமானதும், பொருத்தமானதும்தானே உடை.
“ஸ்மார்ட்!” என்றேன்.
“தேங்க்யூ சார்,” என்றாள், பரவசமான சிரிப்பில்.
நான் நடுவிலும், இரண்டு புறமும் இருவருமாக, நாங்கள் நடந்தே கொஞ்ச தூரத்தில் இருந்த கடற்கரையை அடைந்தோம்.
கடற்கரை சந்தோஷமாக இருந்தது. ஓடிப் பிடித்துக் கல் குதிரைகளின் மேல் உட்கார்ந்து விளையாடும் குழந்தைகள். குழந்தைகள் விளையாட்டைப் பார்த்து ரசிக்கும் பெற்றோர்கள். உலகத்துக்கு ஜீவன் சேர்க்கும் யுவர்களும் யுவதிகளும். கடலைகள், கடல் மணலில் சுகமாக வறுபட்டன.
குழந்தைகள் வாழ்வில் புதிய வர்ணங்களைச் சேர்த்துப் பலூன்கள் பறந்தன. ஸ்டூல் போட்டுப் பட்டாணி சுண்டல் விற்கும் ஐயரிடம் வாங்கிச் சாப்பிட்டோம்.
“கார வடை வாங்கிக் கொடுங்க சார்,” என்றாள் மரி, கொடுத்தேன். தின்றாள்.
”மத்தியானம் சாப்பிடல்லே சார். சோம்பேறித்தனமாக இருந்துச்சு. தூங்கிட்டேன்.”
“ராத்திரி எங்களோடுதான் நீ சாப்பிடறே,” என்றாள் சுமதி.
“இருக்கட்டுங்க்கா.”
”என்ன இருக்கட்டும். நீ வர்றே.”
வரும்போது, சுமதியின் விரல்களில் தன் விரல்களைக் கோத்துக்கொண்டு, சற்றுப்பின் தங்கி மரி பேசிக் கொண்டு வந்தாள். நான் சற்று முன் நடந்தேன்.
சாம்பாரும் கத்தரிக்காய் கறியும்தான். மத்தியானம் வறுத்த நெத்திலிக் கருவாடு இருந்தது.
“தூள்க்கா.... தூள்! இந்தச் சாம்பாரும் நெத்திலிக் கருவாடும் பயங்கரமான காம்பினேஷங்க்கா,” என்றாள் மரி.
*****
மரி இப்போதெல்லாம் காலையும் மாலையும் தவறாமல் எங்கள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாள். காலை இட்டிலி எங்கள் வீட்டில்தான். வருஷம் 365 நாட்களும் எங்கள் வீட்டில் இட்டிலி அல்லது தோசைதான். “ஆட்டுக்கல்லை ஒளித்து வைத்து விட்டால், சுமதிக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும். மரி,” என்பேன். மரி விழுந்து புரண்டு சிரிப்பாள். சாயங்காலங்களில் எங்கள் வீட்டில்தான் அவள் வாழ்க்கை கழிந்தது. பேண்ட் போட்ட அந்தப்பெண், சிரமப்பட்டுச் சம்மணம் போட்டு உட்கார்ந்து சுமதிக்கு வெங்காயம் நறுக்கித் தருவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.
“ஏம்மா... சைக்கிள்ளே ஊரைச் சுற்றுகிற பெண் நீ. இங்கே இவளுக்கு வெங்காயம் நறுக்கித் தர்றியோ?” என்றேன்.
“இதுதான் சார் த்ரில்லிங்கா இருக்கு. கண்ணிலே நீர் சுரக்கச் சுரக்க வெங்காயம் நறுக்கிறது பயங்கரமான எக்ஸ்பீரியன்ஸ்.” என்றாள். ஐயோ இந்தப் பயங்கரமே!
“சார், ஒண்ணு சொல்லட்டுமா?”
“ஊகூம். ரெண்டு மூணு சொல்லு.”
“சீரியஸாகக் கேட்கிறேன், சார். நான் இங்கே வந்து போறதிலே உங்களுக்குத் தொந்தரவு இல்லையே சார்?”
“சத்தியமாகக் கிடையாது.”
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு அவள் சொன்னாள்.
“ஏன் சார் - கெட்டுப் போனவள்னு எல்லோரும் சொல்கிற என்னை எதுக்கு உங்க வீட்டிலே சேர்த்து, சோறும் போடறீங்க?”
சிரிப்புத்தான் வந்தது.
“பைத்தியமே! உலகத்திலே யார் தான் கெட்டுப் போனவங்க? யாராலுமே கெட முடியாது, தெரியுமா? மனசுக்குள்ளே நீ கெட்டுப் போனவள்னு நினைக்கிறியாக்கும்? அதை விட்டுடு. நீயும் கெட்டவள் இல்லை, உங்க அம்மாவும், அப்பாவும் யாருமே கெட்டவங்க இல்லே.”
அவள் சொனாள்: “எங்க அம்மாவைப் பழி தீர்க்கணும்னுதான் அப்படியெல்லாம் நடந்துக்கறேன் சார்.”
“எனக்கும் தெரியும்.” என்றேன்.
பத்து நாள் இருக்குமோ? இருக்கும். ஒரு நாள் மரி என்னிடம் கேட்டாள்.
”சார்.. நான் ஸ்கூலுக்கு வர்றதே இல்லைன்னு நீங்க ஏன் கேட்கவில்லை?”
நான் அவள் முகத்தைப் பார்த்தேன். இரண்டு மணிகள் உருண்டு விழத்தயாராய் இருந்தன. அவள் கண்களில்.
“என்னை நீங்க கேட்டிருக்கணும் சார். ஏண்டி ஸ்கூலுக்கு வரலைன்னு என்னை அறைஞ்சு கேட்கணும் சார். அப்படி யாரும் என்னைக் கேட்க இல்லேங்கறதுனாலதானே நான் இப்படி விட்டேத்தியா இருக்கேன்? என் மேல் இப்படி  யாரும் அன்பு செலுத்தினது இல்லே சார். அன்பு செலுத்தறவங்களுக்குத்தானே அதட்டிக் கேக்கவும் அதிகாரம் இருக்கு?”
“உனக்கே அது தோணனும்னுதானே நான் காத்திருக்கேன். அதனாலே என்ன? ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை. இன்னைக்குப்புதுசா ஆரம்பிப்போம். இன்னைக்குத்தான் டென்த் கிளாஸ்லே நீ சேர்ந்தன்னு வச்சுக்க. நாளையிலேர்ந்து நாம் ஸ்கூலுக்குப் போறோம்.” என்றேன்.
மரி, முகத்தை மூடிக் கொண்டு விசும்பி விசும்பி அழுதாள்.

Thursday, June 2, 2011

பொன்மொழிகள்

   “செயற்படுத்தி முடிக்கும் வரை சில விஷயங்கள்
 எப்போதும் சாத்தியமற்றதொன்றாகவே காட்சிதருவதுண்டு” 


   –நெல்சன் மண்டேலா.









எண்ணமே நம்மில் தூண்டும் சக்தி. மனத்தை உயர்ந்த எண்ணங்களினால் நிரப்புங்கள், நாட்கணக்காகச் சிந்தியுங்கள், தோல்விகளைப் பொருட்படுத்தாதீர்கள்.

 -விவேகானந்தர்

நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால்,நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால்,நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்
- ஆப்ரகாம் லிங்கன்

அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால்
செய்யப்பட்டவை அல்ல;
விடாமுயற்சியினால் தான்
-சாமுவேல் ஜான்சன்.

ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம்.
பெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம்.
முட்டாளுக்கு தூக்கம் எட்டு மணிநேரம்.

-நெப்போலியன்.



தொகுப்பு- புஷ்பராஜ்




Sunday, May 29, 2011

அறிஞர் அண்ணாவின் பேச்சு:


நண்பர்களே,


அறிஞர் அண்ணா எவ்வளவு பெரிய சொற்பொழிவாளர் 
என்று இன்றைய இளைய தலைமுறைக்குத் தெரிவதில்லை. 
தெரிந்து கொள்ள அவர்கள் விரும்பினாலும் போதிய வாய்ப்புகள் 
கிடைப்பதில்லை. வாய்ப்புகளை உருவாக்கி நூலகங்களுக்கு 
சென்று படித்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனாலும் அவர்களுடைய 
வயது அவர்களை நூலகம் நோக்கி இழுக்காமல், பொழுதுபோக்குத் 
தளங்களுக்கு அழைத்துச் செல்கிறது. அண்ணாவைப் பற்றிக் 
கொஞ்சமாவது இன்றைய தலைமுறையினர் அறிந்து கொண்டால், 
பின் அவர்கள் தாங்களாகவே முன்வந்து அண்ணாவின் அருமைகளை, 
பெருமைகளை அறிந்து கொள்ள முற்படுவார்கள். அவர் எவ்வளவு 
முற்போக்காகச் சிந்தித்தார், பேசினார், வாழ்ந்தார் என்றெல்லாம் 
படிக்கின்ற பொழுது நாம் மெய்சிலிர்த்து போய்விடுவோம்.


அவர் மேடையொன்றில் ஆற்றிய உரையை இங்கே உங்களுக்காக பதிவு செய்கின்றேன். அவர் எப்படிப் பட்ட செய்திகளை முன்வைக்கிறார் என்பதன் வாயிலாகவே அவரின் மேன்மையை அறியலாம்.






அறிஞர் அண்ணாவின் பேச்சு:
அருமைத் தோழர்களே! தலைவர் அமைச்சரைக் கூப்பிட்டுவிட்டு அமர்ந்தார். அமைச்சர் ஆண்டவனை அழைத்துவிட்டு அமர்ந்துவிட்டார். (கரகோஷம்)
புது உலகம் அமைக்கவிருக்கும் வீரர்கள் ஆண்டவன் அருளை வேண்டி நிற்கச் சொல்கிறார்அமைச்சர். ஆண்டவன் அருள் எப்பொழுதும் இருக்கும். அமைச்சர் சொல்லிவர வேண்டியதில்லை.
மேலும் நாமக்கல் கவிஞர் போன்ற பக்தர்கள் இருக்கும் இடத்தில் ஆண்டவன் அருளுக்குக் குறைவா என்ன? (கரகோஷம்)
அமைச்சர், விரும்பும் ஆண்டவன் அருள் கிடைக்காவிட்டாலும் அமைச்சர் போன்ற ஆள்பவர் அருள் இருந்தால் எதைத்தான் சாதிக்கமுடியாது?
அணுகுண்டும் ஆளில்லா விமானமும் அங்கே, அன்னிய நாட்டிலே பிறக்கும் போது, கம்பராமாயணமும், கந்தபுராணமும் இங்கே ஏட்டிலே சிறக்கிறது.
அங்கே நாடுகள் வளர்க்கின்றன நாகரிகத்தை, இங்கே ஏடுகள் வளர்க்கின்றன மூடத்தனத்தை (கரகோஷம்)
ஆக்கவும் அளிக்கவும் சக்தி படைத்தவர்கள் எழுத்தாளர்கள். நாட்டுப் புறத்து இருக்கும் ஏழை மக்களுக்கு ராமாயணமும், மகாபாரதமும் சொல்லித் தெரியவேண்டிய விஷயங்களல்ல.
இவை இரண்டும் வேண்டுமா? வேண்டாமா? என்பது பிரச்னையல்ல. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.
இன்று நாட்டுபுறத்தான் ஒருவனை கூப்பிட்டு கேளுங்கள். ஆகாய விமானம் கண்டுபிடித்தது யார் என்று?…. தெரியாது என்பான்.
அணுகுண்டு கண்டுபிடித்தது யார்? …. தெரியாது.
நமது பிரதம மந்திரி யார்? … தெரியாது.
இரண்டாவது மகாயுத்தம் எப்பொழுது ஆரம்பித்தது?…  தெரியாது.
முதன் முதல் இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயன் யார்?…  தெரியாது.
எமனுக்கு வாகனம் என்ன?…. எருமைக்கடா! (பலத்த கரகோஷம்)
இப்படி வேரூன்றிப் போயிருக்கும் அஞ்ஞானத்தை வேரோடு கிள்ளி எறிய முடியும் உங்களால்.
கானகத்திலே ராமன் பட்ட கஷ்டத்தை எழுதவேண்டாம் கர்னாடி மில்லிலே ரத்த வேர்வை சிந்தும் தொழிலாளியின் நரக வேதனையைப் பற்றி எழுதுங்கள்.
அயோத்தியில் தசரதன், மாளிகையைப் பற்றி அல்ல. ஆலைத் தொழிலாளியின் ஓலைக் குடிசையைப் பற்றி எழுதுங்கள்.
அசோக வனத்தில் சீதையின் கண்ணீரைப் பற்றி எழுதவேண்டாம். அந்த அசோகவனமும் கிடைக்காமல், ஆலமரமும் கிடைக்காமல் வேப்ப மரத்தடியில் கதிரிலே காய்ந்து, மழையிலே நனைந்து மிருகமாய் வாழும் கறுப்பாயியைப் பற்றி எழுதுங்கள். (கரகோஷம்)
நான் எத்தனையோ கதையைப் படித்திருக்கிறேன். அவற்றிலே எழுத்துக்கெழுத்து சீர்திருத்தத்தைப் புகுத்தியது வ.ரா.வின் நூல்கள்தான். வ.ரா.வைப்பற்றி எழுதப் பலர் பயப்படுகிறார்கள். ஏனென்றால் அவரும் என்னைப் போல் சந்தேகிக்கப்பட்டவர்.(கரகோஷம்)
இதில் ஒரு விஷயம் தாங்கள் ஒரு சாராரால் சந்தேகிக்கப்படுகிறோம். வ.ரா.இரு சாராராலும் சந்தேகிக்கப்படுகிறார். (கரகோஷம்)
எழுத்தாளத் தோழர்கள் ஒவ்வொருவரும் காண்டேகராகவும், வால்ட்டேராகவும், வால்ட்விட்கனாகவும் மாற வேண்டும் ஏன்? வ.ரா.வாக மாறவேண்டும்.
உவமை கொடுக்கும்பொழுதும் கற்பனைக்கு எட்டாத விஷயங்களைச் சந்திக்கிழுக்கக் கூடாது. காளமேகத்தைப் போலக் கவி பாடினான் என்ற எழுதாதீர்கள். காளமேகத்தைப் போல ஆகவேண்டுமானால் ஒரு காளி வேண்டும்.  அந்த கோவிலுக்கு அவன் போகவேண்டும். பிரசன்னமானதும் வாயைத் திறக்கச் சொல்லவேண்டும். திறந்த வாயிலே ஈட்டியால் எழுதவேண்டும் இவ்வளவு சிரமத்தை. அவனுக்குக் கொடுக்காதீர்கள். ஏன் நாமக்கல் கவிஞரைப்போல அற்புதமாகப் பாடினான் என்ற எழுதுங்கள்.
ஆண்மையிலே பீமனைப் போல் எழுதவேண்டாம். அவினாசிலிங்கத்தைப்போல் ஆண்மை வேண்டும் என்று எழுதுங்கள். வியாசரைப் போல் எழுதினான் என்று எழுதாதீர்கள் – தோழர் டி.எஸ்.சொக்கலிங்கத்தைப்போல் எழுதினான் என்று எழுதுங்கள். சம்பந்தப்பட்டவன் உடனே புரிந்து கொள்ள இதுதான் சரியானவழி.(கரகோஷம்)
உங்கள் ஏட்டை அழுக்குத் துடைக்கும் துடைப்பம் ஆக்குங்கள் நாற்றம் எடுக்கும் குப்பைத் தொட்டியாக்கிவிடாதீர்கள்.
நான் சில பத்திரிக்கைகளைப் பார்க்கிறேன். பத்துப் பக்கம் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் சோதிடத்தை நம்பாதீர்கள். அது சுத்தப்புரட்டு. மக்களை அஞ்ஞானக் காரிருளில் ஆழ்த்தி வைக்கும் அறியாமை. அதில் ஆழ்ந்து விடாதீர்கள் என்று வாசார கோசரமாய் எழுதிவிட்டு பதினோராவது பக்கத்திலே, திருத்தணி ஜோசியர் உங்கள் ஜாதகத்தை அனுப்புங்கள். அற்புதமாகக் கணித்து அனுப்புவார் என்றிருக்கும்.  இது வயிற்றுப் பிழைப்புக்காக என்றால், அவர்கள் வாழ்வதிலும் சாவதுமேல்.
வ.ரா.சொன்னார். காதல் இல்லாவிட்டால் கதையே இல்லை என்று. அவரது கருத்து காதல் அதிகம் வரக் கூடாது என்பது. அதுவல்ல உண்மை; பழைய புராணிகர்களிலிருந்து இன்றைய மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் வரை காதலைப் பற்றி எழுதுகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் இவர்களுக்கும் ஒரு வித்தியாசம்.
அன்றிருந்தவர் ஆரத்தழுவாயோ என்று ஆரம்பித்தார். தழுவல் காதலிலே பிறக்கிறது. ஆரத் தழுவாயோ என்று ஆரம்பித்தால் உலகை மாயையாக்கும் வைதீகக் கூட்டங்கள் அடிக்க வந்துவிடுமே என்ற பயந்தார். அரங்கனே என்று முடித்தார். (கரகோஷம்)
இன்று பகுத்தறிவு ஆக்கம் பெற்றுவிட்டது. எழுத்தாளர்கள் பகிரங்கமாகக் காதலைப்பற்றி எழுதுகிறார்கள். ஆனால் அதில் பழமை வாடை வீசுகிறது.
கமலா விதவை; பிராமணப் பெண். நாராயணன் அழகன்; முதலியார் பையன் – இருவரும் காதலித்தார்கள் கல்யாணம் செய்துகொண்டார்கள். சாதிக் கட்டுப்பாடுகள் உறுமின; தகர்த்தெறிந்தார்கள், என்று முடியுங்கள் கதையை (கரகோஷம்)பெயருக்குப் பின்னால் வரும் சாதி வால்களை அறுத்தெரியுங்கள்.
உலகம் மாயை என்பவர்கள் உங்கள் பார்வையிலே விழட்டும். உலகம் மாயையல்ல. மாய உலகத்தில் மந்திரிகள் இருக்கமாட்டார்கள். (கரகோஷம்) மாய உலத்திலே நாமக்கல் கவிஞர்கள் இருக்கமாட்டார்கள். மாய உலகத்திலே காதல் இருக்காது. மாய உலகத்திலே நீங்களும் நானும் இருக்கமாட்டோம்!
இறுதியாக ஒன்று கூறுகின்றேன் வீழ்ந்திருக்கும் சமுதாயம் வீறு கொண்டெழ, சுரண்டுவோர் ஒழிய சமத்துவம் நிலவ, உங்கள் பேனாமுனை, வாள் முனையாகட்டும்.(கரகோஷம்)

இச்சொற்பொழிவு, கவிஞர் கண்ணதாசனும் தாய்நாடு ஆசிரியர் க.நாராயணனும் இல்லாவிட்டால் தமிழருக்குக் கிடைத்திருக்காது. காற்றோடு காற்றாகப் போயிருக்கும்.




என் கருத்து:


அறிஞர் அண்ணாவின் பேச்சுக்கு விளக்கம் சொல்லும் அளவிற்கு எனக்குத் தகுதியோ, வயதோ, அனுபவமோ வந்து விடவில்லை. ஆனாலும் கூட, என்னுடைய எண்ணங்களில் உதிக்கும் சில கருத்துகள் அறிஞர் அண்ணாவின் கருத்துகளை ஒத்தே இருக்கின்றன. நாம் இன்னும் வளராமல் அல்லது வளரும் நாடாகவே இருப்பதற்குக் காரணம் நம்மிடம் இருக்கும் மூடநம்பிக்கையே. இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டுமானால் நம்மிடமுள்ள தேவையற்ற மூடப்பழக்கங்கள் அடியோடு அகற்றப் பட வேண்டும். வரலாறு நம் தமிழினத்தை முட்டாள்களாக கருதாமல், முற்போக்காளர்களாக கருதிட நாம் நம்மை நடைமுறை வாழ்க்கைக்குத் தயார் படுத்திட வேண்டுமே தவிர,  ஒரு ரூபாய் எழுமிச்சம் பழத்தை நம்பி வாகனமோட்டிகொண்டிருக்கும் மூடர்களாகவே இனிமேலும் இருக்கக் கூடாது. எனவே சுயமாகச் சிந்தித்து செயல்படுங்கள். வெற்றி கிட்டும். வாழ்த்துகள்




- புஷ்பராஜ்





Thursday, May 26, 2011


கண்ணதாசன் கவிதை


பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!





என் கருத்து:


கண்ணதாசன் கடவுளை நம்புபவர். அவரே கூட, ஒவ்வொன்றையும் அனுபவித்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.  கண்ணதாசன் இந்தக் கவிதையை எந்த நோக்கத்தில் எழுதினார் என்று எனக்கு தெரியாது.  மனிதர்கள் அனைவரும் வாழ்வை பல்வேறு எதிர்பார்ப்புகளோடு அணுகுவார்கள். பெரும்பான்மை மனிதர்கள் பின்னால் என்ன நடக்க இருக்கிறது எனபதை முன்பே தெரிந்து கொள்ள விரும்பி ஜோசியம் பார்ப்பது, குறி பார்ப்பது போன்ற மூட நம்பிக்கைகளில் ஈடுபடுவதைப் பார்க்கிறோம். ஒரு செயல் நடைபெறும் முன் அதைப் பற்றிய எதிர்பார்ப்புகள் இருப்பது தவறில்லை. ஆனால் என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்தால்தான் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வேன் என்று அடம்பிடிப்பது தவறு. அப்படி எல்லாம் முன்பே நமக்குத் தெரிந்து விட்டால் வாழ்வின் சுவாரஸ்யம் போய்விடும். ஒரு படைப்பு பல கருத்துக்களை வலியுறுத்தும் தன்மை வாய்ந்தது. அதுவும் கண்ணதாசன் அவர்களின் படைப்பு சற்று உயர்ந்தவை. எனவே, வாழ்வில் அடுத்த அடி எடுத்து வைக்கும் வரை அது ரகசியமாக இருப்பதே நல்லது. எது நடந்தாலும், அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள நிச்சயமாக ஏதாவது இருக்கும். எனவே சோதனைகள் என்று நாம் கருதும் அனைத்தும் நாம் புரியவிருக்கும் சாதனைகளுக்கான வழிகளாக அமையும். கடவுள் என்ற ஒன்றை நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி. எல்லாவற்றிற்கும் அவர் துணை புரிவார் என்று எத்தகைய உழைப்பும் இல்லாமல் இருப்பது நம்மை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லாது.


நண்பர்களே, உங்களை நம்பி வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியையும் அனுபவித்து வாழ முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்


- புஷ்பராஜ்

Wednesday, May 25, 2011

ஏழையின் மனைவி


காதலிக்கும் போது கூட
அவர் பூ வாங்கித் தந்ததில்லை
காரணம் கேட்டேன்.
 பூவே பூ வைக்குமா?
கவிதை சொன்னார்..
காசில்லை என்று சொல்ல
விரும்பாமல்..



- புஷ்பராஜ்

Sunday, March 27, 2011

வாக்குரிமை நம் கடமை

                    தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது.  இந்தச்சூழ்நிலையில் சில செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகின்றேன். வாக்குரிமை என்பது ஜனநாயக நாட்டில்தான் நாம் இன்னும் வாழ்கிறோம் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது.

                  பொதுவாக நாட்டைப் பற்றி, அரசியலைப் பற்றி அவதூறாகப் பேசுகின்றவர்களுள் பலர் வாக்களிப்பதே இல்லை. அரசியல் இப்படி தரம் தாழ்ந்து போனதற்கு நாமும் ஒரு காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நம்முடைய வாக்களிக்கும் கடமையை நாம் சரியாகச் செய்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்குமா? 

              இன்றைய நாளில் தேசிய அளவிலும் சரி, மாநில அளவுகளிலும் சரி ஊழல் பெருகி விட்டது. இதில் வருத்தம் என்னவென்றால் தவறு செய்தவர்கள் அதற்காக வருத்தப் படுவது கூட இல்லை. இதில் கூடுதல் வேதனை யாதெனில் தங்கள் தவறுகளை நியாயப் படுத்தும் கொடுமையும் இங்குதான் நடக்கிறது.

                 பொறுப்பான பதவியில் வகிக்கும் நம் நாட்டுப் பிரதமர் கூட சில வேளைகளில் தனக்கும் இந்த நாட்டிற்கும் சம்பந்தம் இல்லாதவர் பதில் கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. பி.ஜே.தாமஸ் விவகாரம் இதற்கு உதாரணம். 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைப் பற்றி கேட்டால் கூட்டணி நிர்பந்தம் என்கிறார். கூட்டணி என்ற போர்வையில் நாட்டை ஒரு சிலர் கொள்ளையடிப்பதை வேடிக்கைப் பார்க்கும் நபர்தான் நம் நாட்டுப் பிரதமர். அவர்  நேர்மையாக இருந்தும் புண்ணியமில்லையே. 

         ஆங்கிலேயர்களிடம் போராடி, பல உயிர்களை தியாகம் செய்து சுதந்திரம் வாங்கியது இப்படி உள்ளூர் திருடர்களிடம் நாட்டை அடகு வைக்கத்தானா? நான் மட்டும் நலமாக இருந்தால் போதும் என்கின்ற மனநிலை சரிதானா? இந்த சமுதாயம் இப்படியே வீணாவதை பார்க்கும்போது, இந்நிலையை மாற்ற எதுவுமே செய்யாமல் இருக்கிறோமே என்று மனது உறுத்தவில்லையா?


      இங்கு தமிழ்நாட்டில் தி.மு.க இலவசங்களை நம்பியே அரசியல் நடத்துகிறது. இந்த வியாதி இப்போது அ.தி.மு.க விற்கும் தொற்றிக்கொண்டு விட்டது போலும்.  அதற்கு சில காரணங்கள் உண்டு. தேர்தலில் வெற்றி பெறும் நோக்கோடு சில திட்டங்களை அ.தி.மு.க அறிவித்திருந்தாலும் அதி சில நல்ல திட்டங்கள் இடம் பெற்றிருக்கின்றன். அவைகளில் சில இங்கே...




  •   வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக 3 சென்ட் நிலம்.
  •   முதியோர்கள், ஆதரவற்றோர், குழந்தைகளுக்கு சிறப்பு விடுதிகள் கட்டப்படும்.

  •   தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் அரசுடமையாக்கப்படும். அரசு மானியத்தில் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி வழங்கப்படும்.

  • அனைத்து விவசாயிகளுக்கும் இலவச சொட்டு நீர்ப் பாசன வசதி செய்து தரப்படும்.

  • இயந்திர மீன்பிடி படகுகள் வாங்கத் தேவையான மானியம் வழங்கப்படும்.



  •  மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், மீனவ குடும்பத்திற்கான உதவித் தொகை 2,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
        
  • பருவ காலத்தால் 4 மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாத சூழ்நிலையில் இருக்கும் மீனவ குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4,000/- ரூபாயாக வழங்கப்படும். 

  • கிராம, நகர்ப்புறங்களில் 4 ஆண்டுகளில் மும்முனை மின் இணைப்பு வசதி தரப்படும்.

            அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கையை பாராட்டி பதிவு செய்வதன் மூலம் எனக்கு அந்தக் கட்சியின் சாயம் பூசிவிட வேண்டாம்.  தி.மு.க அமைச்சர்களின் சொத்துக்களைக் கணக்கிட்டுப் பார்த்தாலே நமக்கு தலை சுற்றும். எல்லோரும் கல்வித்தந்தைகள் ஆகிவிட்டார்கள். யாருடைய பணம்? நம் வரிப்பணம்.  நூற்று இருபது கோடி மக்களை நூறு குடும்பங்கள் ஆள்கின்றது. இது தவறு. நல்லக்கண்ணு ஐயாவைப் போல் ஒரு மனிதரை தி.மு. க வும் சரி, அ.தி.மு.க வும் சரி காட்ட முடியுமா? முடியாது. அதே சமயம், செல்வி. ஜெயலலிதா அவர்களின் நிர்வாகம் சிறப்பாக இருக்கும் என்பது உண்மை.  இன்றைய நாடு, குறிப்பாக தமிழ்நாடு வாழ வேண்டுமென்றால் நாம் வாக்களிக்க வேண்டும். 

இலங்கையில் தமிழர்கள் கொன்று குவித்த போது தன் கட்சி மந்திரிகளை ராஜினாமா செய்யச் சொல்லாத கலைஞர் சீட்(சி.ஐ.டி)   பேரத்திற்காக  ராஜினாமா செய்யச்சொன்னார்.  பின்னர்தான் தெரிந்தது அது சீட் பேரத்திற்காக அல்ல. சி.ஐ.டி யின் பிடியில் இருந்து தப்ப நடைப்பெற்ற கபட நாடகம் என்பது.

அ.தி.மு.க வில் இருந்த வைகோ அவர்களை அதன் தலைமை கைவிட்டதும் வேதனைக்குறியது.  எனினும் தலையை எடுப்பவர்களை விட, கையை எடுப்பவர்கள் மேல் என்றே எனக்குத் தோன்றுகிறது. தி.மு.க விற்காக பிரச்சாரம் செய்ய வலம் வரும் வடிவேலு, குஷ்பு போன்றவர்கள் நாட்டை காப்பாற்றி விடுவார்களா?  வடிவேலு ஒரு காமெடி நடிகர். குஷ்புவிற்கு தமிழ் கூடச் சரியாக பேசத்தெரியாது. 

ஆறு மாதத்திற்கொரு முறை கட்சி மாறும் ராமதாஸ் போன்றவர்கள் நாட்டை ஏமாற்றுபவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். திருமாவளவன் ஈழத்தமிழர்களை நேசிப்பவராகத் தன்னைக் காட்டிக் கொண்டாலும், காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்பதன் மூலம் அது பொய் என்று வெளிப்படுத்தி விட்டார். இதில் என்னைக் கவர்ந்தவர் சீமான் அவர்கள், வைகோ அவர்கள் மற்றும் நல்லக்கண்ணு ஐயா அவர்கள்.  எது எப்படியோ உங்கள் வாய்ப்பை வீணாக்காதீர்கள். 


 என் வேண்டுகோள் ஒன்றுதான். தமிழர்கள் சாகும்போது கடமை மறந்து செயல்பட்ட காங்கிரஸை இந்த மாநிலத்தை விட்டே துரத்துங்கள். இது என் விருப்பம். எனினும் என் மனசாட்சி சொல்கிறது இப்படி சொல்லச் சொல்லி,


யாருக்காகவும் அல்லாமல் உங்களின் சுய சிந்தனைக்குட்பட்டு வாக்களியுங்கள். 


 
 
          






















Wednesday, March 2, 2011

படம் பார்த்தேன்


தியேட்டருக்குச் சென்றேன்
படம் பார்த்தேன்..
நல்ல படம்
நல்ல கதை
நல்ல நடிப்பு
நல்ல இசையும் இருந்தது
பத்து ஆண்டுகளுக்கு முன்பு...



அவள் உருவம்

பூவுக்கு
கை, கால்கள் வரைந்தேன்
ஓவியத்தில் அவள் உருவம்..











Wednesday, January 5, 2011

கவிக்கோ கவிதை

பாருக்குள்ளே நல்ல நாடு

அவர்களைச் சிறையில்
சந்தித்தேன்.
“என்ன குற்றம் செய்தீர்கள்” 
என்று கேட்டேன்.
ஒவ்வொருவராகச்
சொன்னார்கள்..
எங்கள் வீட்டில்
திருடிக்கொண்டு ஒருவன் ஒடினான்.

“திருடன் திருடன்” என்று கத்தினேன்.
அமைதிக்குப் பங்கம் விளைவித்தாக என்னைக்
கைது செய்து விட்டார்கள்.


“என் வருமானத்தைக்
கேட்டார்கள்”

‘நான் வேலையில்லாப்
பட்டாதாரி’ என்றேன்

வருமானத்தை மறைத்தாக வழக்குப்
போட்டு விட்டார்கள்.


“நான் கரி மூட்டை
தூக்கும் கூலி”

கூலியாக கிடைத்த
ரூபாய் நோட்டில்

கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது.
கறுப்பு பணம்
வைத்திருந்ததாகக்

கைது செய்து விட்டார்கள்.


“என் வயலுக்கு வரப்பு
எடுத்துக் கொண்டிருந்தேன்

பிரிவினைவாதி என்று
பிடித்துக் கொண்டு

வந்து விட்டார்கள்”
“அதிகாரி லஞ்சம் வாங்கினார், தடுத்தேன்.
அரசுப் பணியாளரை
அவருடைய கடமையைச்

செய்ய விடாமல்
தடுத்ததாகத் தண்டித்து விட்டார்கள்.”


“அலிபாபாவும் நாற்பது
திருடர்களும்” படச் 

சுவரொட்டியை ஒட்டிக் கொண்டிருந்தேன்.

சட்டமன்ற
உறுப்பினர்களை
அவதூறு 
செய்ததாக
அழைத்துக் கொண்டு
வந்து விட்டார்கள்”


“வறுமைக் கோட்டை
அழிப்போம்” என்று பேசினேன்.

அரசாங்க சொத்தை
அழிக்கத் தூண்டியதாக

அடைத்துப்
போட்டுவிட்டார்கள்”


“ஊழல் பேர்வழிகளை
நாடு கடத்த வேண்டும்” 

என்று எழுதினேன்,
“கடத்தல்காரன்” என்று

கைது செய்து விட்டார்கள்.
“நான் பத்திரிக்கை ஆசிரியன். தலையங்கத்தில் 
உண்மையை எழுதினேன்.
நாட்டின்

ஸ்திரத் தன்மையைக்
குலைத்ததாகக் 
கொண்டு
வந்து விட்டார்கள்”


“சுதந்திர தின விழாவில்
‘ஜன கண மன’ பாடிக்
கொண்டிருந்தார்கள்.
நான் பசியால் சுருண்டு
படுத்துக்கொண்டிருந்தேன்.
எழுந்து நிற்க முடியவில்லை. 

தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாகச் 
சிறையில்
அடைத்து விட்டார்கள்”



நான் வெளியே வந்தேன்.
சட்டம் ஒழுங்குப் பிரச்சினை
எதுவும் 
இல்லாமல் நாடு
அமைதியாக இருந்தது..